வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்
கீழ்வேளூர் அருகே வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிக்கல்:
நாகை மாவட்டம் பாலக்குறிச்சி அருகே ஓட்டத்தட்டை கிராமம் கட்டையன் படுகை தெருவை சேர்ந்தவர் அபூர்வம். திட்டச்சேரி அருகே குத்தாலம் பகுதியில் அபூர்வத்தின் உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அபூர்வம் மற்றும் அவரது உறவினர்கள் 19 பேர் சரக்கு வேனில் நேற்று சென்று கொண்டிருந்தனர். சரக்கு வேனை வடுகச்சேரியை சேர்ந்த கார்த்திகேசன் என்பவர் ஓட்டி சென்றார். இருக்கை ஊராட்சி கீழபெருந்தலைக்குடி பிள்ளையார் கோவில் அருகே வடுகச்சேரி-தேவூர் சாலையில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சரக்கு வேன், சாலையோரம் இருந்த வயலிலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வேனில் சென்ற 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கட்டையன் படுகை தெருவை சேர்ந்த அமுதா (41), சுப்பிரமணியன் (52), ரமேஷ் (49), கணேசன் (46), ராஜேந்திரன் (72), ராஜேஸ்வரி (40), அபூர்வம் (60), செல்வராணி (28), பெரியார் செல்வி (43), வசந்தா (40),சுகன்யா (3) உள்பட 12 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.