சரக்கு ஆட்டோ- மொபட் மோதல்; தொழிலாளி பலி

திருமருகல் அருகே சரக்கு ஆட்டோ-மொபட் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் இந்த விபத்தில் அவர் நண்பரும் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-09-09 16:21 GMT

திட்டச்சேரி:

திருமருகல் அருகே சரக்கு ஆட்டோ-மொபட் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் இந்த விபத்தில் அவர் நண்பரும் படுகாயம் அடைந்தார்.

கூலி தொழிலாளி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருப்புகலூர் ஊராட்சி மேலப்பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55).விவசாய கூலி தொழிலாளி. இவர் தனது நண்பரான வவ்வாலடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (53) என்பவரும் நேற்று காலையில் டீ குடிப்பதற்காக வவ்வாலடியில் இருந்து புத்தகரத்தை நோக்கி மொபட்டில் சென்றனர். மொபட்டை ராமகிருஷ்ணன் ஓட்டி சென்றார். அப்போது புத்தகரத்தில் சென்ற போது எதிரே வந்த சரக்கு ஆட்டோவும்-மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

பரிதாபமாக சாவு

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் ஏனங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் யோகேஷ் (29) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்