பொதுக்கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் கலக்காமல் கண்காணிக்க வேண்டும்

குமரி மாவட்டத்தில் பொதுக்கழிவுகளுடன் மருத்துவக் கழிவுகள் கலக்காமல் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-11-29 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பொதுக்கழிவுகளுடன் மருத்துவக் கழிவுகள் கலக்காமல் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

மேலாண்மைக்குழு கூட்டம்

குமரி மாவட்ட அளவிலான, மருத்துவக் கழிவுகள் மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் - 2016 ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உரிய இசைவாணை மற்றும் அங்கீகாரம் பெற வேண்டும். மாவட்டத்தில் உருவாகும் அனைத்து மருத்துவக் கழிவுகளும் முறையாக சேகரித்து நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பாப்பான்குளம் கிராமத்தில் இயங்கும் பொது உயிர் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனம் மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.

அறிவுறுத்தல்

மருத்துவக் கழிவுகளைக் கையாளும் மருத்துவப் பணியாளர்களுக்கு, மருத்துவக் கழிவுகளை கையாளும் முறை குறித்து சுழற்சி முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பொதுக்கழிவுகளுடன் மருத்துவக் கழிவுகள் கலக்கப்படாமல் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும். மருத்துவக்கழிவுகள் பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மட்டுமே எடுத்துச் செல்வதையும், பிற வாகனங்களில் எடுத்துச் செல்லாமல் இருப்பதையும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.

மருத்துவமனைகள் https://tnpcb.gov.in/bmwms/#login என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து அதன் பிறகு தங்கள் மருத்துவ கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனத்திற்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டும். மேலும் மருத்துவக் கழிவுகள் கையாளுதல் குறித்த புகார்களுக்கு பொதுமக்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் 18004256750 என்கிற எண்ணில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம்.

வாகனங்கள் பறிமுதல்

கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை வாகனங்களில் கொண்டு வருவதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை சாவடிகளில் கண்காணித்து கழிவுகளை ஏற்றிவரும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகள் உரிய முறையில் பிரிக்கப்பட்டு பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறதா? என்பதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன், மருத்துவம் மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்