கார் டீக்கடைக்குள் புகுந்து விபத்து; டிரைவர் பலி
பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது, சுற்றுலா பயணிகள் சென்ற கார் டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உயிரிழந்தார். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
குன்னூர்,
பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது, சுற்றுலா பயணிகள் சென்ற கார் டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உயிரிழந்தார். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த ராபின், முனீஸ்வர ராவ் உள்பட 9 பேர் ஓணம் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். காரை சஞ்சித் முகமது (வயது 19) என்பவர் ஓட்டினார். இந்தநிலையில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, நேற்று காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அருகே முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல சஞ்சித் முகமது முயன்றார். அப்போது வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலைவில் கவிழ்ந்தபடி டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டிரைவர் பலி
இந்த விபத்தில் டீக்கடை உரிமையாளர் ரஞ்சித்குமார் மற்றும் காரில் சுற்றுலா வந்த 9 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சஞ்சித் முகமது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த ராபின், முனீஸ்வரராவ் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 7 பேருக்கு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.