சாலை தடுப்பில் கார் மோதி மனைவி, கைக்குழந்தையுடன் வக்கீல் பலி

சாலை தடுப்பில் கார் மோதி மனைவி, கைக்குழந்தையுடன் வக்கீல் பலி

Update: 2022-06-14 12:31 GMT

மூலனூர்,

தாராபுரம் அருகே சாலை தடுப்பில் கார் மோதிய கோர விபத்தில் மனைவி, 3 மாத கைக்குழந்தையுடன் வக்கீல் பலியானார். காயம் அடைந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வக்கீல்

பெரம்பலூர் கம்பர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). வக்கீல். இவருடைய மனைவி போதுமணி (25). இவர்களுக்கு 3 வயதில் ருத்ரா கசம்பூ என்ற மகளும், பிறந்து 3 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் இருந்தனர். மணிகண்டன் குடும்பத்துடன் திண்டுக்கல்லில் குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் மணிகண்டன் ஒரு காரில் மனைவி, மகள் மற்றும் 3 மாத கைக்குழந்தையுடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் திண்டுக்கல் திரும்பினார். காரை மணிகண்டன் ஓட்டவே, முன் இருக்கையில் போதுமணி தனது 3 மாத கைக்குழந்தையுடன் அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் ருத்ரா கசம்பூ அமர்ந்து இருந்தாள்.

இவர்களுடைய கார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஓட்டன்சத்திரம் சாலை சாலைக்கடை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென்று சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த சிமெண்டு தடுப்பில் பயங்கரமாக மோதியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே போதுமணி மற்றும் அவருடைய 3 மாத ஆண் குழந்தை இறந்தனர். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் அவருடைய மகள் ருத்ரா கசம்பூ ஆகியோரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இருவரும் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். குழந்தை ருத்ரா கசம்பூ சிகிச்சை பெற்று வருகிறாள். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மூலனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போதுமணி, மற்றும் 3 மாத கைக்குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை தடுப்பில் கார் மோதி மனைவி, குழந்தையுடன் வக்கீல் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

----------------------

படங்கள் உண்டு.

Tags:    

மேலும் செய்திகள்