கடையை உடைத்து பட்டாசுகளுடன் கார் கடத்தல்
சாத்தூர் அருகே கடையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை திருடியதோடு காரையும் கடத்தி சென்றனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே கடையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை திருடியதோடு காரையும் கடத்தி சென்றனர்.
பட்டாசுகள் திருட்டு
சாத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் அதிக அளவிலான பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றன. சாத்தூர் அருகே மேட்டமலை பகுதியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையை அவரது கணவர் ராஜேஷ்(வயது36) நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது கடையின் பக்கவாட்டு சுவர் துளையிட்டு, ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சாத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த ராஜேஷ் போலீசார் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் திருடப்பட்டது தெரியவந்தது.
காரையும் கடத்தி சென்றனர்
பின்னர் ராஜேஷ் சிறிது நேரம் கழித்து கடையை சுற்றிப் பார்த்தபோது தான் அங்கு நிறுத்தி வைத்திருந்த காரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். திருடிய பட்டாசுகளை பட்டாசு கடையின் காரிலேயே கடத்திய சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக விருதுநகரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் விரைவில் திருட்டு ஆசாமிகளை கண்டுபிடித்து விடலாம் என தெரிவித்தார்.
கடையை உடைத்து பட்டாசுகளை திருடியதோடு காரையும் கடத்தி சென்ற சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.