தர்மபுரியில் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:
தர்மபுரியில் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர தேர்த்திருவிழா
தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி உற்சவம் நடைபெற்றது.
மேலும் பால்குட ஊர்வலமும், சாமி திருக்கல்யாணம், தோரணவாயில் ஊஞ்சல் சேவை மற்றும் மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நாளான நேற்று பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி காலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன. பின்னர் பெண்கள் மட்டும் நிலைப் பெயர்க்கும் தேரோட்டமும், மாலை பொதுமக்கள் வடம் பிடிக்கும் தேரோட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (புதன்கிழமை) வேடர்பறி உற்சவமும், நாளை (வியாழக்கிழமை) கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சயன உற்சவமும், 8-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.