தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சாமி கோவில் தேரோட்டம்-3 மாநில பக்தர்கள் பங்கேற்பு
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் 3 மாநில பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பேட்டராய சாமி கோவில்
தேன்கனிக்கோட்டையில் உள்ள மிகவும் பழமையான சவுந்தர்யவல்லி சமேத பேட்டராய சாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ஆராடல் உற்சவம், ஊஞ்சல் உற்சவம், வசந்த உற்சவம், ஹம்ச வாகன உற்சவம், சிம்ம வாகன உற்சவம், சேஷவாகன உற்சவம், பல்லக்கு உற்சவம், வைரமுடி உற்சவம், அனுமந்த வாகன உற்சவம், பிரகல்லாத பரிபாலன உற்சவம், கருட வாகன உற்சவம், அஸ்வ வாகன உற்சவம், ரத மண்டப உற்சவம், கஜேந்திர மோட்ச உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று முன்தினம் இரவு ராமபாணம், அன்னமாச்சார்யா சங்கீர்த்தனம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 10.45 மணிக்கு தொடங்கியது.
வடம் பிடித்து...
முன்னதாக பேட்டராய சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சாமி, சவுந்தர்யவல்லி தாயாருடன் தேரில் எழுந்தருளினார்.
ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரஹ்மான், கிருஷ்ணகிரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் நாகராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், எம்.ஜி.வசந்தகுமார், பழனிசாமி, தொழில் அதிபர் ராமமூர்த்தி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்த்தனர்.
3 மாநில பக்தர்கள்
முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மாலையில் நிலையை அடைந்தது. தேன்கனிக்கோட்டை, ஓசூர், அஞ்செட்டி தாலுகா பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணகான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 3 மாநில பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்படது.
தேரோட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுப்பிரமணி, சம்பூர்ணம் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.