வந்தவாசி
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 52), கார் டிரைவர். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கதிரேசன் மோட்டார்சைக்கிளில் கீழ்க்கொடுங்காலூரில் இருந்து வந்தவாசி வழியாக ஆராசூருக்கு நேற்று சென்று கொண்டிருந்தார்.
வந்தவாசி- சேத்துப்பட்டு சாலை, கீழ்சாத்தமங்கலம் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது எதிரே தவறான பாதையில் வந்த தனியார் பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் கதிரேசன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.