சேலத்தில் கொட்டி தீர்த்த கனமழை:மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதம்குழந்தை உள்பட 2 பேர் படுகாயம்

Update: 2023-09-07 20:10 GMT

சேலம்

சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் மரங்கள் சாய்ந்து விழுந்தில் ஒரு கார் சேதமானது. இதில் குழந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொட்டித்தீர்த்த கனமழை

சேலம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், அம்மாப்பேட்டை, அன்னதானப்பட்டி, பள்ளப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருவில் ஆறாக ஓடியது.

மரங்கள் சாய்ந்தன

இதனிடையே, சங்கர் நகர் பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி பஸ் மீது மரம் விழுந்தது. மேலும், அவ்வழியாக வந்த கார் மீது மரத்தின் கிளைகளும் முறிந்து விழுந்தன. இதில், காரின் முன்பகுதி முழுவதும் சேதமானதால் காருக்குள் இருந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து காரின் இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த ஒரு குழந்தை உள்பட 2 பேர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

 மரத்தை அப்புறப்படுத்தினர்

இதுகுறித்து அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். அதில், காருக்குள் இருந்தவர்கள், தமிழ்ச்சங்கம் பகுதியை சேர்ந்த தர்ஷத் குமார் (வயது 30), என்பது தெரியவந்தது. காருக்குள் அவரது மனைவி சாரதா, 2 பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர்.

இதில், தர்ஷத் குமார் மற்றும் அவரது ஒரு குழந்தைக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கார் மீது விழுந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பள்ளத்தில் கார்கள் சிக்கின

சேலம்-ஆத்தூர் மெயின்ரோடு டி.எம்.எஸ். பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது. அப்போது, அவ்வழியாக அடுத்தடுத்து வந்த 2 கார்கள் பாதை தெரியாமல் பள்ளத்தில் சிக்கிக்கொண்டன. இதனால் அங்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய கார்களை மீட்கும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்