மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் சாவு

அஞ்சுகிராமம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-01-11 21:06 GMT

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சாலையை கடக்க முயன்ற போது...

குமரி மாவட்டம் ரஸ்தாகாடு பகுதியை சேர்ந்தவர் அப்பாவு நாடார் (வயது 76), விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் பால்மணி (60), கட்டிட தொழிலாளி.

இவர்கள் இருவரும் நேற்று மதியம் 2.20 மணிக்கு அஞ்சுகிராமத்தில் பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு ரஸ்தாகாடு நோக்கி புறப்பட்டனர். பின்னர் மேட்டுக்குடியிருப்பு சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த சாலை வழியாக அகஸ்தீஸ்வரத்தை அமலதாஸ் என்பவர் காரை ஓட்டி வந்தார்.

கார் மோதி 2 பேர் சாவு

இந்தநிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து அப்பாவு, பால்மணி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதில் அப்பாவு அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பால்மணியை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சில் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீசார் 2 பேருடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் அஞ்சுகிராமம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்