மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார்.
அணைக்கட்டு அடுத்த மூலைகேட் பூட்டு தாக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தரம் (வயது 65), ரவி (45). அண்ணன், தம்பிகளான இருவரும் நேற்று முன்தினம் ஜதர்புரத்தில் அக்காள் கணவர் இறந்த துக்க நிகழ்சிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரவி ஓட்டி வந்தார். கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அதிவேகமாக ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். அங்கு இருந்தவர்கள் இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுந்தரம் ஆம்புலன்ஸிலேயே இறந்து விட்டார். ரவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிகொண்டா போலீசார் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து சுந்தரத்தின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.