நாகர்கோவில் அருகே கோர விபத்து: அரசு பஸ் மீது கார் மோதல்; நடன கலைஞர்கள் 4 பேர் பலி

நாகர்கோவில் அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் நடன கலைஞர்கள் 4 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-12 18:34 GMT

ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் நடன கலைஞர்கள் 4 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

நடனக்குழுவினர் காரில் பயணம்

குமரி மாவட்டத்தில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட நடன குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலை கிணற்றில் உள்ள ஒரு கோவிலின் திருவிழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த குழுவில் 9 ஆண்கள், 3 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.

அங்கு நள்ளிரவு நிகழ்ச்சியை முடித்ததும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு அனைவரும் ஒரு காரில் புறப்பட்டனர். இந்த காரை திருவிதாங்கோடு அருகே கைதாகுழி காலனியை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ் (வயது 37) என்பவர் ஓட்டினார். அவருடன் முன் இருக்கையில் அருமனை அருகே கும்பகோடு குழிஞ்சன்விளை பகுதியை சேர்ந்த கண்ணன் (24), திருவரம்பூர் அம்பான்காளை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் அஜித் (23) ஆகியோர் பயணம் செய்தனர்.

பஸ் மீது கார் மோதியது

நள்ளிரவு வரை தூங்காமல் இருந்ததால் நடனக்குழுவினர் அனைவரும் காரில் கடும் அசதியில் இருந்தனர். டிரைவர் மட்டும் காரை ஓட்ட மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நேற்று காலை 6 மணிக்கு ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் லாயம் விலக்கு பகுதியில் கார் வந்தது. அப்போது நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் நோக்கி அரசு பஸ் பயணிகளை ஏற்றி சென்றது. காலை நேரம் என்பதால் குறைவான பயணிகளே இருந்தனர். இந்த பஸ்சை எறும்புகாடு வைராகுடியிருப்பை சேர்ந்த இம்மானுவேல் (48) ஓட்டினார்.

இந்தநிலையில் கார் திடீரென டிரைவர் சதீஷின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது.

அலறல் சத்தம்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் காரின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. பஸ்சின் முன்பக்கமும் சேதமடைந்தது.

அந்த சமயத்தில் காருக்குள் தூக்க கலக்கத்தில் இருந்த நடனக்குழுவினர் என்ன நடக்கிறது என தெரியாமல் காரின் இடிபாடுகளில் சிக்கி அய்யோ, அம்மா என அலறினர். மேலும் வலி தாங்க முடியாமல் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர். மோதிய வேகத்தில் காருக்குள் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சிலர் படுகாயம் அடைந்து மயக்க நிலைக்கும் சென்றனர்.

4 பேர் பலி

இந்த பயங்கர விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அஜித் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே டிரைவர் சதீஷ், கண்ணன், அருமனை அருகே குழிச்சான்விளைவீடு பகுதியை சேர்ந்த பீர்கான் மகன் அபிஷேக் என்ற சிஞ்சு (22) ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

இதில் பலியான கண்ணன் காரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார். அவரை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விபத்தில் பலி எண்ணிக்கு 4 ஆக உயர்ந்தது.

மேலும், காருக்குள் இருந்த 8 பேர் மற்றும் பஸ்சில் வந்த ஒரு பயணி என 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:-

காயமடைந்தவர்கள்

திருவட்டார் பகுதியை சேர்ந்த சதீஸ் பாபு மகன் சுஜின் (18), மார்த்தாண்டம் காளை சந்தையை சேர்ந்த ஜெனில் குமார் மகன் விக்னேஷ் (22), திருவரம்பு மதுர விளாகம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் நிதிஷ் (22), இவரது அண்ணன் நிஷாந்த் (24), திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையை சேர்ந்த ஷாஜி மனைவி சஜிதா (37), அவரது மகள்கள் அனந்திகா (18), அனாமிகா (12), சிதறால் பகுதியை சேர்ந்த சசி மகன் அஸ்வந்த் (16), பஸ்சில் வந்த ஆரல்வாய்மொழியை சேர்ந்த எட்வின் (22).

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

விபத்து நடந்ததும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சரி செய்ததோடு மீட்பு பணியிலும் ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் பலர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த விபத்து குறித்து பஸ் டிரைவர் இம்மானுவேல் கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்