சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - தொழிலதிபர் படுகாயம்...!
சென்னையில் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரில் இருந்த தொழிலதிபர் படுகாயம் அடைந்து உள்ளார்.
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 47). தொழிலதிபரான இவர் இன்று காலை 11 மணியளவில் அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சொகுசு காரில் சென்று உள்ளார்.
இந்த கார் கணேசனின் உறவினர் வீட்டுக்கு அருகே வரும் போது காரின் என்ஜின் பகுதி பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் காரை விட்டு இறங்க முயன்றார். ஆனால் கார் கதவுகள் லாக் ஆனாதால் அவரால் வெளியேவர முடியவில்லை.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு காரின் கண்ணாடியை உடைத்து காருக்குள் மயங்கிய நிலையில் தீ காயத்துடன் இருந்த கணேசனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் 60 சதவீத தீ காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.