திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையானது தற்போது கார்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பராமரிப்பு இல்லை
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே மங்கலம் ரோட்டில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இந்த நிழற்குடையானது சரியான வகையில் பராமரிக்கப்படாமல் இருப்பதால் நிழற்குடையின் உள்ளே சிலர் படுத்து கிடக்கின்றனர். இதேபோல் பழைய சாமான்களும் குவித்து போடப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் இதை பயன்படுத்த முடிவதில்லை. மேலும், தற்போது இந்த நிழற்குடையானது கார்கள் நிறுத்தக்கூடிய இடமாக மாறி வருவதால் ஒட்டுமொத்தமாக நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் நிழற்குடைக்கு அருகாமையில் உள்ள வெட்டவெளியில் நின்று பஸ் ஏறி வருகின்றனர். இதன்காரணமாக வெயில், மழையால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
பயணிகள் அவதி
சுற்றுவட்டார பகுதியில் வர்த்தக ரீதியிலான கடைகள் அதிக அளவில் இருப்பதாலும் மாநகராட்சி அலுவலகம் இருப்பதாலும் அதிக அளவிலான பயணிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று தினமும் பஸ் ஏறி வருகின்றனர். தற்போது நிழற்குடை இல்லாத காரணத்தால் இருக்கை வசதியின்றி பஸ்சுக்காக கால் கடுக்க காத்து நிற்கின்றனர். இதில் வயதானவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் நிற்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காகவும், நிழல் மற்றும் இருக்கை தேடி அருகாமையில் உள்ள கடைகளில் தஞ்சமடைகின்றனர். எனவே, இங்கு பயன்பாடின்றி காணப்படும் நிழற்குடையை நல்ல முறையில் பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இதேபோல், இங்கு பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே இதையும் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.