மணப்பாறை அருகே கார்-பஸ் மோதல்; 5 பேர் பலி
மணப்பாறை அருகே கார்-பஸ் மோதிக்கொண்டதில் 5 பேர் உயிரிழந்தனர்
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆளிப்பட்டியை சேர்ந்த பாப்புவின் மகன் நாகு என்ற நாகரத்தினம்(வயது 23). மணப்பாறை அருகே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்த இவர், நாம் தமிழர் கட்சியில் மணப்பாறை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராகவும் இருந்தார்.
இவரும், கே.உடையாபட்டியை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் அய்யப்பன்(35), கணேசனின் மகன் மணிகண்டன்(25), முத்தமிழ்செல்வன்(40), கரூர் மாவட்டம் பில்லூரை சேர்ந்த ெசல்வராஜின் மகன் தீனதயாளன்(20) ஆகியோரும் நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கணக்கம்பட்டியில் உள்ள சித்தர் சமாதிக்கு ஒரு காரில் சென்றனர். அங்கு தரிசனம் செய்த பின்னர், மீண்டும் அவர்கள் அந்த காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கார்-பஸ் மோதல்
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த கல்கொத்தனூர் பிரிவு சாலை என்ற இடத்தில் மாலை சுமார் 4.15 மணியளவில் அந்த கார் வந்தது. அதேநேரத்தில் கார் வந்த சாலையின் மைய தடுப்பை அடுத்துள்ள சாலையில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் மைய தடுப்பை தாண்டி மறுபக்கம் உள்ள சாலைக்கு வந்தது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் காரும் எதிரே வந்த அரசு பஸ்சும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் பஸ்சின் முன்பகுதியில் கார் சிக்கியது.
பள்ளத்தில் கவிழ்ந்தன
மேலும் மோதிய வேகத்தில் காரும், பஸ்சும் உருண்டு சாலையோரத்தில் உள்ள சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தன. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள்... என்று அபய குரல் எழுப்பினர். விபத்தின்போது பயங்கர சத்தமும் ஏற்பட்டது. அதைக்கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது விபத்தில் சிக்கிய பலர் படுகாயமடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார் மற்றும் வையம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் சிக்கிய காரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.
5 பேர் பலி
அப்போது கார் உருக்குலைந்த நிலையில் இருந்தது. அதில் பயணித்த 5 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்தவர்களில் அய்யப்பன் மணப்பாறை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும், தீனதயாளன் மெக்கானிக்காகவும் வேலை பார்த்து வந்தனர். மணிகண்டன் டீக்கடையும், முத்தமிழ்செல்வன் நகை அடகு கடையும் நடத்தி வந்தனர்.
மேலும் இந்த விபத்தில் பஸ்சின் டிரைவர் வையம்பட்டியை சேர்ந்த ராேஜந்திரன், கண்டக்டர் கரூர் மாவட்டம் பால்மடைப் பட்டியை சேர்ந்த பிரகாஷ் (31) மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உள்பட 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 24 பேர் மணப்பாறை மற்றும் திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் பஸ்சில் இருந்து டீசல் தொடர்ந்து வெளியான நிலையில் இருந்தது. இதனால் அதன் மீது தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ விபத்து ஏற்படாமல் தடுத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் பிரதீப்குமார், பழனியாண்டி எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதற்கிடையே இந்த விபத்து குறித்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்-பஸ் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.