ஆசனூர் அருகே பரபரப்பு மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை துரத்திய காட்டு யானை ஓடியதால் உயிர் தப்பினர்
துரத்திய காட்டு யானை
ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை காட்டு யானை துரத்தியது. இதனால் அவர்கள் மோட்டார்சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓடியதால் உயிர் தப்பினர்.
கரும்பு லாரிகளை...
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் ஆசனூர் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். குறிப்பாக கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளுடன், யானைகள் உலா வருவதும், அவ்வாறு வரும் யானைகள் அந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை மறித்து அதில் உள்ள கரும்புகளை பிடுங்கி தின்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவம் நேற்றும் நடந்தது.
துரத்திய யானை
ஈரோட்டை சேர்ந்தவர்கள் சங்கர் (வயது 34), தினேஷ் (28). இவர்கள் 2 பேரும் வாகன மெக்கானிக் தொழில் செய்து வருகிறார்கள். 2 பேரும் ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் சிக்கொலா அருகே பொம்மனள்ளி பகுதியில் டிராக்டர் பழுது பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் நேற்று சென்று உள்ளனர். ஆசனூரை அடுத்த தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை திடீரென வந்து உள்ளது. பின்னர் அந்த யானை சங்கர், தினேஷ் சென்ற மோட்டார்சைக்கிளை வழிமறித்ததுடன், அவர்களை துரத்தியது.
உயிர் தப்பினர்
இதில் பயந்து போன அவர்கள் தங்களுடைய மோட்டார்சைக்கிளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் இருவரும் உயிர் தப்பினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானையானது அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன் பிறகு 2 பேரும் மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.