காதல் ஜோடிக்கு உதவிய தி.மு.க. பிரமுகரின் கார் தீவைத்து எரிப்பு; பெண்ணின் அண்ணன் ஆத்திரம்
சின்னமனூரில் காதல் ஜோடிக்கு உதவிய தி.மு.க. பிரமுகரின் காரை தீவைத்து எரித்த பெண்ணின் அண்ணன் கைது செய்யப்பட்டார்.
சின்னமனூரில் காதல் ஜோடிக்கு உதவிய தி.மு.க. பிரமுகரின் காரை தீவைத்து எரித்த பெண்ணின் அண்ணன் கைது செய்யப்பட்டார்.
காதலுக்கு எதிர்ப்பு
தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடி தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் மல்லிகா (வயது 24). இவரது மாமனாரான கூழையனூரை சேர்ந்த ஈஸ்வரனின் மகன் தினேஷ்குமார் (28). மல்லிகாவும், தினேஷ்குமாரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதல் விவகாரம் குறித்து அறிந்த இருதரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதல் ஜோடி தங்களது வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவர்கள், தங்களது உறவினரான தி.மு.க. பிரமுகர் சந்திரசேகரின் உதவியை நாடினர். அதன்படி, இன்று காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சந்திரசேகர் தனது காரில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு அவர்களை அழைத்து சென்றார். அங்கு மல்லிகாவுக்கும், தினேஷ்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது.
போலீசில் தஞ்சம்
பின்னர் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இருதரப்பு பெற்றோரையும் பேச்சுவார்த்தை நடத்த போலீசார் அழைத்தனர். அதன்படி, இருதரப்பு பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மணமக்கள் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பம்போல் வாழலாம் என்று போலீசார் கூறினர்.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, மல்லிகாவின் அண்ணன் பெருமாள் (26), போலீஸ் நிலையத்திற்கு வெளியே வந்தார். அப்போது போலீஸ் நிலையம் முன்பு நின்றிருந்த சந்திரசேகரின் காரை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கினார். பின்னர் கையில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து காரின் மீது ஊற்றி, தீவைத்துவிட்டு பெருமாள் தப்பிவிட்டார்.
கார் எரிந்து நாசம்
அப்போது கார் தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த போலீசார், சின்னமனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சந்திரசேகர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருமாளை கைது செய்தனர்.
காதல் ஜோடிக்கு உதவிய தி.மு.க. பிரமுகரின் காரை பெண்ணின் அண்ணன் தீவைத்து எரித்த சம்பவம் சின்னமனூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.