கூரியர் மூலம் கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது

குமரியில் கூரியர் மூலம் கஞ்சா கடத்தியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பார்சல் அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

Update: 2022-06-19 16:18 GMT

நாகர்கோவில்:

குமரியில் கூரியர் மூலம் கஞ்சா கடத்தியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பார்சல் அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

கஞ்சா விற்பனை

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தம்மத்துகோணம் பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அனந்தன் நகரை சேர்ந்த ஜெரிஸ் (வயது24), எறும்புக்காடு பகுதியை சேர்ந்த வினோத் (28), மேலராமன்புதூரை சேர்ந்த பிரிஜின் பிரகாஷ் (22) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை ேபாலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட 3 பேரும் கஞ்சாவை எங்கிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கூரியர் மூலமாக நாகர்கோவிலில் உள்ள ஒரு பாா்சல் அலுவலகத்துக்கு கஞ்சா பண்டல் கடத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள சம்பந்தப்பட்ட பார்சல் அலுவலகத்துக்கு நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு கஞ்சா பார்சல் அனுப்பியவரின் முகவரி மற்றும் செல்போன் எண்ணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கேட்டு வாங்கினார். அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது தவறான எண் என்பது தெரியவந்தது. போலி முகவரி மற்றும் செல்போன் எண்ணை கொடுத்து கஞ்சா பண்டல் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்கப்படும்

ராஜாக்கமங்கலத்தில் கைதானவர்கள் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா வியாபாரியை தொடர்பு கொண்டு பேசி கூரியர் மூலமாக கஞ்சாவை வாங்கி இருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட பார்சல் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலியான முகவரி கொடுத்து கஞ்சா பண்டல் அனுப்பியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட பார்சல் அலுவலகம் மூலமாக ஏற்கனவே பல முறை கஞ்சா வந்துள்ளது. கஞ்சா பண்டல் மீது மெக்கானிக் கருவி என்று எழுதி அனுப்புகிறார்கள். இதனால் பார்சல் அலுவலகத்தில் எந்த சந்தேகமும் ஏற்படுவது இல்லை.

எனவே குமரி மாவட்டத்தில் இயங்கி வரும் பார்சல் அலுவலகங்கள் இனி எந்த பார்சல் வாங்கினாலும், அனுப்பினாலும் உரியவர்களின் சரியான முகவரி, செல்போன் நம்பர் கேட்டு வாங்க வேண்டும். இதுதொடர்பாக பார்சல் அலுவலக உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தி கஞ்சா பார்சல் வருவதை தடுக்கும் விதமாக அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் நோட்டீசும் வழங்க இருக்கிறோம். அதன் பிறகு பார்சல் அலுவலகங்கள் மூலமாக கஞ்சா பண்டல் அனுப்புவது தெரியவந்தால் பார்சல் அலுவலகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

படித்தநபர்கள்...

குமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 120 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 235-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். குமரி மாவட்டத்துக்கு கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கஞ்சா விற்பனைக்காக வருவது தெரியவந்துள்ளது. ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு கஞ்சாவை வியாபாரிகள் வாங்குகிறார்கள். முக்கியமாக படித்த நபர்கள் தான் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்