கரும்புக்கு பயிர் காப்பீடு செய்யலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் கரும்புக்கு பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று வேளாண் இணை இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:
வேளாண் இணை இயக்குனர் ரமணன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரும்புக்கு பயிர் காப்பீடு
விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு 2022-23-ம் ஆண்டில் 7,500 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு நடவு மற்றும் மறுதாம்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 7.6.2022 வரை 184.31 ஹெக்டேரில் 177 விவசாயிகள், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். பயிர் காப்பீடு செய்வதன் மூலம் எதிர்பாராத இயற்கை சீற்றத்தினால் கரும்பு சாகுபடி பாதித்து பொருளாதார நஷ்டம் ஏற்படும்போது காப்பீடு நிறுவனத்தின் மூலம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.
நடப்பாண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம். பிரிமிய தொகையாக ரூ.2,840-ஐ ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டும். கரும்பு பயிர்க்கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கியில் இசைவு கடிதம் அளித்து பயிர் காப்பீட்டிற்கான பிரிமிய தொகையை பயிர் கடனில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்து காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
ஆவணங்கள்
கடன் பெறாத விவசாயிகள், உரிய முன்மொழிவு படிவம் சிட்டா, கரும்பு சாகுபடிக்கான அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், செல்போன் எண், ஆதார் அட்டையை கொண்டு அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி காப்பீட்டிற்கான பிரிமிய தொகையை நேரடியாக செலுத்தி இத்திட்டத்தில் இணையலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.