வண்ண மெழுகுவர்த்தி தயாரிப்பு பணி மும்முரம்

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மானாமதுரை அருகே பல வகையான வண்ண மெழுகுவர்த்தி தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-11-17 18:45 GMT

மானாமதுரை, 

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மானாமதுரை அருகே பல வகையான வண்ண மெழுகுவர்த்தி தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மெழுகுவர்த்தி தயாரிப்பு பணி

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவது வழக்கம். காலப்போக்கில் இந்த அகல் விளக்குகளுக்கு எண்ணெய், திரி உள்ளிட்டவை பயன்படுத்துவதால் இவற்றை பெரும்பாலான மக்கள் தவிர்த்து வீடுகளில் கார்த்திகை திருநாள் அன்று பல்வேறு வகையான மெழுகுவர்த்தியை ஏற்றி வீட்டை அலங்கரித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

கார்த்திகையை முன்னிட்டு மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் தற்போது மெழுகுவர்த்தி தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இத்தொழில் மிகவும் பாதிப்படைந்த நிலையில் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளது. இருப்பினும் வேலையாட்கள் பற்றாக்குறையால் இந்த பணிக்கு பழைய மவுசு இல்லாமல் போனது வருத்தமடையும் வகையில் உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மூலப்பொருட்கள் விலை உயர்வு

இதுகுறித்து மெழுகுவர்த்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் இடைக்காட்டூரை சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது:- ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மெழுகுவர்த்தி பயன்பாடு அதிகமாக இருக்கும். புத்தாண்டு, கிறிஸ்துமஸ் விழா உ்ள்ளிட்ட பண்டிகைகளுக்கும், இந்துக்கள் கார்த்திகை தீப விழாவுக்கு மெழுகுவர்த்தியை அதிகமாக பயன்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் இடைக்காட்டூர் பகுதியில் சுமார் 10 குடும்பத்தினர் இந்த மெழுகுவர்த்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தாண்டு கார்த்திகை தீப திருநாளுக்காக இங்கு ரெடிமேட் பேன்சி ரக குபேர தீபம், லெட்சுமி மங்கள தீபம், அண்ணாமலையார் தீபம், விஷால் பேன்சி ரக விளக்கு, தர்ஷினி விளக்கு ஆகியவை அறிமுகம் செய்து தயாரித்து வருகிறோம். இந்த மெழுகுவர்த்தி செய்வதற்கான மெழுகு, திரி, பெட்ரோலிய மூலப்பொருட்கள் கடந்தாண்டு ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.180 வரை விலை அதிகரித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களுக்கு...

இதை தவிர தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்தியை பேக்கிங் செய்ய பயன்படுத்தும் அட்டை பெட்டியும் விலை அதிகரித்துள்ளது. இதனால் இந்தாண்டு ஒரு பாக்கெட்டிற்கு ரூ.5 வரை விலை உயர்த்தி விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர இத்தொழிலுக்கு இதற்கு முந்தைய காலங்களை போன்று போதிய தொழிலாளர்கள் வேலைக்கு வருவதில்லை. இதனால் குடும்ப உறுப்பினர்களே இத்தொழிலில் ஈடுபடுகிறோம்.

இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகளை சென்னை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம். ஆனால் கடந்தாண்டை விட இந்தாண்டு விலை உயர்வு காரணமாக வியாபாரிகள் முகம் சுழித்து வருகின்றனர்.

வரும் காலங்களில் இந்த தொழிலை எவ்வாறு செய்வது என தெரியாமல் தவித்து வருகிறோம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்