போலீசாருடன் தேர்வர்கள் வாக்குவாதம்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை எழுத தாமதமாக வந்ததால் தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாதாகோவில் அருகே தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை எழுத 20 தேர்வர்கள் குறித்த நேரத்தில் செல்லாமல் 9 மணிக்கு மேல் தாமதமாக சென்றனர். இதனால் அவர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க அங்கிருந்த போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் அவர்கள் தங்களை தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கும்படி கூறி போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மேலும் பூட்டப்பட்ட தேர்வு மைய கதவை அடித்து உடைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதேபோல் விழுப்புரம், செஞ்சி உள்பட பல்வேறு மையங்களுக்கு தேர்வு எழுத தாமதமாக சென்ற தேர்வர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் தேர்வர்கள் பலர் ஏமாற்றத்துடன் தங்களது வீட்டுக்கு திரும்பி சென்றனர்.