பேரூராட்சி ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்பணி ரத்து

பூங்காவுக்கு தோண்டிய குழியில் விழுந்து சிறுமி இறந்த சம்பவம் எதிரொலியாக, பேரூராட்சி ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்பணி ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2022-09-07 17:39 GMT

கடமலைக்குண்டு அருகே உள்ள மூலக்கடையை சேர்ந்தவர் முத்துசரவணன். இவருடைய மகள் ஹாசினி ராணி (வயது 8). கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்தாள். நேற்று முன்தினம் சிறுமி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் ஹாசினி ராணி தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமியின் தந்தை முத்துசரவணன் மற்றும் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம், முத்துசரவணன் ஒரு மனு கொடுத்தார். அவருக்கு கலெக்டர் ஆறுதல் கூறி, மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முரளிதனிடம் கேட்டபோது, " இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தமபாளையம் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். சம்பந்தப்பட்ட பூங்கா கட்டுமான பணிக்கான ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பூங்கா கட்டுமான பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காமல் 6 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்ததாக தெரியவந்தது.

ஓடைப்பட்டியில் பூங்காவுக்கு தோண்டிய குழியில் தவறி விழுந்து பலியான சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் நேற்று மாலை மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டரிடம் மனு கொடுக்க அவர்கள் காத்திருந்தனர். தகவல் அறிந்ததும், இரவு 7.30 மணியளவில் கலெக்டர் முரளிதரன் அங்கு வந்தார். அப்போது சிறுமியின் தந்தையை அங்கு காணவில்லை. அவரை உறவினர்கள் தேடியபோது, உள்ளாட்சி பிரதிநிதிகள் 2 பேர் அவரை காரில் அழைத்துச் சென்றதாக தெரியவந்தது. பின்னர் அவர்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டு கலெக்டர் காத்திருப்பது குறித்து தகவல் கொடுத்தனர். இரவு 9 மணியளவில் தி.மு.க. பிரமுகர் ஒருவரின் காரில் சிறுமியின் தந்தை அழைத்துவரப்பட்டார்.. சுமார் 1½ மணி நேரம் அலுவலக வாசலில் காத்திருந்த கலெக்டர் முரளிதரன், சிறுமியின் தந்தையிடம் மனுவை வாங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்