அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களின் உரிமம் ரத்து
அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில்:
அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனரக வாகனங்கள்
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்புக்குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 22-ந் தேதியன்று திருவத்துவபுரம் பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அதிக பாரத்துடன் ஜல்லி ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உரிமம் ரத்து செய்யப்படும்
24-ந் தேதியன்று மதுரை மண்டல பறக்கும் படையினர் நடத்திய திடீர் சோதனையில் புத்தேரி கிராமத்தில் அதிக பாரத்துடன் கிராவல் ஏற்றிச்சென்ற கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் களியல், முளகுமூடு, நாகர்கோவில் கோட்டார், வெள்ளமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.