அரசு பஸ்சின் தகுதி சான்று ரத்து
இருக்கைகளில் உள்ள கம்பிகள் உடைந்து இருந்தது குறித்து பயணிகள் புகார் தெரிவித்ததால் அரசு பஸ்சின் தகுதி சான்றை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பொள்ளாச்சி
இருக்கைகளில் உள்ள கம்பிகள் உடைந்து இருந்தது குறித்து பயணிகள் புகார் தெரிவித்ததால் அரசு பஸ்சின் தகுதி சான்றை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அரசு பஸ்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வாளவாடியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் இருக்கைகளில் உள்ள கம்பிகள் உடைந்து காணப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பயணிகள் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி மற்றும் ஊழியர்கள் உடுமலை ரோட்டில் தயராக நின்றனர்.
அப்போது அங்கு வந்த அந்த அரசு டவுன் பஸ்சை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் பஸ்சிற்குள் பயணிகள் நடந்து செல்லும் தரைத்தளம் உடைந்து இருந்தது. மேலும் இருக்கைகளில் உள்ள கம்பிகளும் உடைந்து காணப்பட்டது.
தகுதி சான்று ரத்து
இதையடுத்து பயணிகளை பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு, அந்த பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர். பின்னர் அந்த பஸ்சின் தகுதி சான்றை ரத்து செய்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
வாளவாடியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பஸ் மோசமான நிலையில் இருப்பதாக பயணிகள் தெரிவித்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் பஸ்சின் மேற்கூரை சேதமாகி மழைநீர் ஒழுகுவதற்கு வாய்ப்பு இருந்தது. மேலும் பஸ்சிற்குள் தரைத்தளம் சேதம், இருக்கைகளில் கம்பிகள் உடைந்து கிடந்தது. இதனால் போக்குவரத்திற்கு தகுதி இல்லாத வாகனமாக கருதி அந்த பஸ்சின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.
அறிவுரை
இந்த குறைபாடுகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்று மற்ற பஸ்களிலும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். பயணிகளுக்கு பஸ்சில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.