36 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து

சிதம்பரத்தில் 36 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்து சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2023-05-22 18:45 GMT

சிதம்பரம்:

சிதம்பரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி சிதம்பரம்-சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளிவளாகத்தில் நேற்று 140 வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனை சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன் ஆய்வு செய்தார்.

வாகனங்களில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா?, பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, கேமரா பொருத்தப்பட்டுள்ளதா?, அவசரகால கதவு நல்ல நிலையில் உள்ளதா?, அவை சரிவர இயங்குகிறதா? என்று பார்த்தார்.

தகுதி சான்று ரத்து

இதில் குறைபாடு இருந்த 36 வாகனங்களின் தகுதி சான்றிதழை சப்-கலெக்டர் ரத்து செய்தார். மேலும் அவர், டிரைவர்களுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். தீயணைப்பு துறையினர் தீ விபத்து குறித்தும், தீயை அணைப்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர்.

ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், மோட்டார் வாகன ஆய்வாளர் க.விமலா, சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்