குறுகலான பாலம் அகலப்படுத்தப்படுமா?
பி.ஏ.பி. கால்வாயின் குறுக்கே உள்ள குறுகலான பாலம் அகலப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நெகமம்
பி.ஏ.பி. கால்வாயின் குறுக்கே உள்ள குறுகலான பாலம் அகலப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அடிப்படை வசதிகள்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ஜோத்தம்பட்டி, மூலனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்பட பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒன்றியத்தின் கடைகோடியில் உள்ள கிராமங்கள் என்பதால், எந்தவித அடிப்படை வசதிகளும் சரிவர இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இங்குள்ள பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக பொள்ளாச்சிக்கு வந்து செல்கின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் கல்வி தேவைக்காக நெகமம், பொள்ளாச்சி, உடுமலை, காளியாபுரம் மற்றும் கோவைக்கு சென்று வருகின்றனர். ஆனால் அங்கு 2 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலும் தனியார் வாகனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
சிதிலமடைந்தது
இதற்கிடையில் ஜோத்தம்பட்டி கிராமத்தில் பி.ஏ.பி. கால்வாய்க்கு குறுக்கே பாலம் ஒன்று உள்ளது. ஆனால் அந்த பாலம் மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு விபத்துகளும் நிகழ்கிறது.
இது தவிர அந்த பாலமும் கட்டப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டதால், சிதிலமடைய தொடங்கிவிட்டது. இதனால் மழைக்காலத்தில் அந்த பாலத்தில் செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக பலத்த மழை பெய்யும்போது அந்த வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதிய பாலம்
இதுகுறித்து அந்த கிராம பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் உள்ள பாலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு குறுகலாக கட்டப்பட்டது. தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், பாலத்தில் இடவசதி பற்றாக்குறையாக உள்ளது. மேலும் பாலமும் பழுதடைய தொடங்கிவிட்டது. அதில் கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.
இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்ைக எடுக்கவில்லை. எனவே பழைய பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக பாலம் கட்ட வேண்டும். குறிப்பாக பழைய பாலத்தை விட அகலமாக அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.