தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?

தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?

Update: 2022-07-30 12:43 GMT


கோவையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தப்படுமா? என்று கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

மாநகராட்சி கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடந்தது. மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றிச்செல்வன், ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் முதன் முறையாக இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ள ஆணையாளர் பிரதாப்புக்கு மேயர் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:-

முதல்-அமைச்சருக்கு பாராட்டு

மத்திய மண்டல தலைவர் மீனாலோகு:- தமிழக முதல்-அமைச்சர் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி வருகிறார். 18 மாதங்களில் நடக்க வேண்டிய பணிகளை 4 மாதங்களில் முடித்து காட்டி உள்ளார். இது பாராட்டுக்குரியது. மேலும் கோவை மாநகராட்சியில் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தேங்கும் நிலை உள்ளது. எனவே போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

கிழக்கு மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக்: கோவை விமான நிலையம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

கல்விக்குழு தலைவர் மாலதி: கல்விக்குழுவின் கட்டுப்பாட்டில் பூங்காக்கள், கல்வி, விளையாட்டு மைதானங்கள் உள்ளன. ஆனால் கல்வி மட்டும்தான் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கூறுகிறார்கள். இது எங்களின் உரிமையை பறிக்கும் செயல் ஆகும். எனவே இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார். இதற்கு மேயர் பதிலளித்து பேசும்போது, 4 நாட்களுக்குள் இதற்கு தீர்வு காணப்படும் என்றார்.

தெருநாய்கள் தொல்லை

கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் பேசும்போது, கோவையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. தினமும் ஏராளமான பொதுமக்களை தெருநாய்கள் கடித்து வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு ஆணையாளர் பிரதாப் பதிலளித்து பேசும்போது, தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த, அந்த நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்ய முகாம்கள் நடத்தப்படும். ஒரு தெருநாயை பிடித்து அதற்கு கருத்தடை செய்ய வழங்கப்படும் தொகை, தற்போது ரூ.700 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்றார்.

அழகுஜெயபால் (காங்கிரஸ்) : மேயர் என்பதற்கு முதல்வர் என்று தமிழில் பொருள். எனவே மேயரை மாநகர முதல்வர் என்று அழைக்கலாம். கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் ரோடு, லாலி ரோடு சந்திப்பு பகுதியில் குழி தோண்டப்பட்டு உள்ளதால் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. எனவே உடனடியாக அவற்றை சரிசெய்ய வேண்டும்.சித்ரா வெள்ளியங்கிரி (ம.தி.மு.க.): பீளமேடு ஹட்கோ காலனியில் இருந்து பீளமேடு போலீஸ் நிலையம் வரை செல்லும் ஓடையில் மனித கழிவுகள் கலந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.எனவே அந்த ஓடையை ஆய்வு செய்து மனித கழிவுகள் கலப்பதை தடுப்பதுடன், இந்த ஓடையை ஒட்டி போலீஸ் நிலையம் அருகே செல்லும் பாதையில் தார்சாலை அமைத்து, மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

வசதி இல்லை

பிரபாகரன் (அ.தி.மு.க.): மாநகர பகுதியில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்தினபுரி மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அமர மேஜை வசதி இல்லாததால் கீழே இருந்து படிக்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தகுந்த வசதியை செய்து கொடுக்க வேண்டும்.மேலும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினார்கள். அதற்கு ஆணையாளர் பிரதாப் பதிலளித்து பேசும்போது கோவை மாநகர பகுதியில் தற்போது ரூ.161 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன என்றார். கூட்டத்தில் மொத்தம் 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்