வழக்கில் சிக்கிய 33 மத்திய மந்திரிகள் மட்டும் பதவியில் நீடிக்கலாமா?

செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்க கூடாது என்றால் வழக்கில் சிக்கிய 33 மத்திய மந்திரிகள் மட்டும் பதவியில் நீடிக்கலாமா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.

Update: 2023-06-16 21:15 GMT

செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்க கூடாது என்றால் வழக்கில் சிக்கிய 33 மத்திய மந்திரிகள் மட்டும் பதவியில் நீடிக்கலாமா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.

செந்தில்பாலாஜி கைது

அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை சிவானந்தகாலனியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது:-

தி.மு.க. நெருப்பாற்றில் நீந்தி வளர்ந்த இயக்கம். மீண்டும் காவிகளுக்கு வேலை இல்லை என்ற வியூகம் வகுக்க கூடிய ஆற்றல் தி.மு.க.விடம் இருப்பதால்தான் எதிர்க்கின்றனர். கொங்கு மண்டலத்தில் இருந்து தான் பெரியார் வந்தார். வருகிற 23-ந் தேதி அடுத்த வியூகத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இதை திசை திருப்பவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்துத்துவாவின் திரிசூலம் போல அமலாக்க துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவை மத்திய அரசு கையில் இருக்கிறது. யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட, யார் வரக் கூடாது என்பது மிக முக்கியம். அதை மு.க.ஸ்டாலின் சரியாக செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறி வைக்கப்படுகிறார். கொள்கை ரீதியாக எதிர்ப்பதால் ஆர்.எஸ்.எஸ் எதிர்க்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக சொல்லி இருப்பதே கோபத்தின் உச்சம். முதல்-அமைச்சரை முடக்க வேண்டும் என்பதற்காக செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இப்போது நடப்பது ஒரு கொள்கை போர். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கூடாது என்கிறார் கவர்னர். மத்திய மந்திரிகளாக இருக்கும் 33 பேர் மீது வழக்குகள் இருக்கிறது. அவர்கள் மட்டும் பதவியில் தொடரலாமா?

எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. இப்படி செய்து வருகிறது. 9 ஆண்டுகளில் பா.ஜ.க. எதுவும் தமிழகத்திற்கு செய்ய வில்லை. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்க மு.க.ஸ்டாலின் முற்படுகிறார்.

அதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் பா.ஜ.க. ஈடுபடுகிறது. பாலியல் புகார் சொல்லபட்ட பா.ஜ.க. எம்.பி.க்கு இருக்கும் பாதுகாப்பு, தமிழக அமைச்சருக்கு இல்லை. கிளர்ந்து எழ வேண்டிய நேரம் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

அமலாக்கத்துறை அடாவடிகள் நாடு முழுவதும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் பழிவாங்க பா.ஜ.க. இதை கையாண்டு வருகிறது. கவர்னர் எந்த அடிப்படையில் முதல்- அமைச்சர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தை முதலில் ஏற்றுக் கொள்ள வில்லை. இன்று ஏன் ஏற்றுக் கொண்டீர்கள். முதல் -அமைச்சரை சவாலுக்கு அழைக்கிறீர்களா?. தி.மு.க.வின் காப்பு அரணாக ம.தி.மு.க. எப்போதும் இருக்கும்.

கவர்னரை திரும்ப பெற வேண்டும் என ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. இதற்கு கூட்டணி கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும். போராட்ட களங்களில் தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருப்போம். இந்த அணி மத்திய அரசின் அதிகாரத்தை மண்ணோடு மண்ணாக மக்கிபோக செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆ.ராசா எம்.பி.

கூட்டத்தில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.:-

செந்தில்பாலாஜியை கைது செய்து விட்டால் கோவையில் வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணுகின்றனர். அமலாக்கத் துறையை ஏவி எங்களை ஒன்றும் செய்ய முடியாது. கலைஞரின் நூற்றாண்டு விழா கோவையில் நடத்த வேண்டும். அப்போது அந்த மேடையில் புதிதாக வரும் பிரதமரும், 10 மாநில முதல்- அமைச்சர்களும் இருப்பார்கள். அந்த நாள் வரும். அந்த இலக்கை நோக்கி பயணிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் கை வைப்பது தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம். அதற்கு எடுத்துக்காட்டு 48 மணி நேரத்தில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது தான். 18 மணி நேரம் அமைச்சரை பூட்டி வைத்து விசாரணை செய்ய உங்களுக்கு உரிமை யார் கொடுத்தார்கள்?

கவர்னருக்கு என்ன அதிகாரம் என்று அ.தி.மு.க.வினருக்கு தெரியாதா?. பா.ஜ.க.வின் தொங்கு சதையாக அ.தி.மு.க. மாறியுள்ளது. தனிப்பட்ட செந்தில் பாலாஜிக்காக அரசியல் சாசனம் அழிந்து போய் விடக்கூடாது. பா.ஜ.க.வின் அமைப்பு போன்று வருமானவரி, சி.பி.ஐ, அமலாக்கத்துறை இயங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-

பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சி கள் மீது மட்டுமே வழக்கு போடப்பட்டுள்ளது. அதிகார அத்து மீறல் தொடர்கிறது. அரசியல் அமைப்பின்படி, சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. அதிகாரிகள் வெறும் அம்பு தான். அவர்களை ஏவுவது மோடியும், அமித்ஷாவும்தான். ஜனநாயக மரபுகளை மீறி கவர்னர் செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

ராகுல் காந்தியை பிரதமராக மாற்றுவேன் என கூறிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் இருந்து மாறவில்லை. அமலாக்க துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மோடி அரசு மிரட்டி வருகிறது.

கவர்னர் அலுவலகமா? ஆர்.எஸ்.எஸ். அலுவலகமா? என தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கவர்னர் செயல்படுகிறார்.

கோவையில் 100 வார்டில் ஒரு வார்டில் கூட பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. அதனால் செந்தில்பாலாஜியை முடக்க நினைத்து உள்ளனர். தடுமாற்றம் ஏற்படுத்த முடியும் என நினைக்கிறார்கள் .

இது செந்தில் பாலாஜிக்கு வைத்த செக் அல்ல. முதல்- அமைச்ச ருக்கு வைக்கப்பட்டு உள்ள செக். அவருக்கு உறுதுணையாக நாம் இருக்கிறோம் என்பதற்கான கூட்டம் இது.

இவ்வாறு அவர் கறினார்.

காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது:-

தி.மு.க. மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு மத்திய அரசு தேவை இல்லாத நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது.

அரசுக்கு எதிராக கவர்னரை தூண்டிவிடும், மத்திய அரசு இப்பொழுது பல்வேறு அமைப்புகளையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது தெளிவாக தெரிகிறது.

இந்தியா முழுவதிலும் திராவிட மாடல் ஆட்சி கொண்டு வர உறுதிமொழி எடுக்கக்கூடிய கூட்டமாக தான் இது இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியதாவது:-

மத்திய அரசு எப்போது எல்லாம் அடக்குமுறைகளை கையாளு கிறதோ அப்போது எல்லாம் இந்த மண் திமிறி கொண்டு எழுந்து இருக்கிறது. இந்த அடக்குமுறையை கண்டு நாங்கள் அஞ்ச வில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. அது என்ன ஆனது?. ஆட்டம் போடாதீர்கள். காலம் எல்லாவற்றையும் சேர்த்து உங்களுக்கு பாடம் புகட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈ.ஆர்.ஈஸ்வரன்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது:-

டெல்லிக்கு எச்சரிக்கை செய்யவே இந்த கூட்டம் நடத்தப்படுகி றது. எமர்ஜென்சி நேரத்தில் கூட இப்படி பிரச்சினையை சந்தித்து இல்லை.

இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி. எதிர் கட்சி ஆட்சி அமைத்து உள்ள மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து இதை செய்துள்ளனர். இங்கு மற்ற மாநிலங்களில் போல் செய்ய நினைத்தால் ஏமாற்றம் அடைவீர்கள். 2024-ல் தேர்தலில் பா.ஜ.க.வை தூக்கி எறியப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்.ஏ. பேசியதாவது:-

பிரதமர் மோடி, தன்னை எதிர்க்கக்கூடியவர்களை அமலாக்கத்துறை, வருமானவரி துறை போன்றவற்றை ஏவிக்கொண்டிருக்கிறார். எங்கே எல்லாம் அமலாக்கத்துறை, வருமானத்துறையை ஏவி விட்டு சோதனை செய்கிறீர்களோ அங்கே எல்லாம் நீங்கள் தோல்வி அடைகிறீர்கள்.

அதற்கு உதாரணமாக கர்நாடக தேர்தல் உள்ளது. கர்நாடக துணை முதல்-அமைச்சர் சிவக்குமார் மீதும் இந்த துறைகள் ஏவப்பட்டது. அவரின் முயற்சியால் தான் அங்கே பா.ஜ.க. தோல்வி அடைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்