கறம்பக்குடி பங்களாகுளம் மேம்படுத்தப்படுமா?

மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டு கறம்பக்குடியின் அடையாளமாக திகழ்ந்த பங்களாகுளம் மேம்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-04-24 18:50 GMT

பங்களா குளம்

புதுக்கோட்டை நகராட்சியை போல் நல்ல வடிவமைப்புடன் உள்ள வீதிகளை கொண்டது கறம்பக்குடி பேரூராட்சி. இங்கு சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிராமங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் ஜன நெருக்கடி மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த பேரூராட்சியில் மழைநீர் சேமிப்பிற்கான நீர் ஆதாரங்களாக 10-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் உள்ளன.

இவற்றில் கறம்பக்குடி நகரத்தின் மைய பகுதியில் பஸ் நிலையத்திற்கு அருகே பங்களா குளம் உள்ளது. மன்னர் காலத்தில் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த குளம் உருவாக்கப்பட்டது. மன்னரின் ஓய்வு பங்களாவுக்கு அருகே இருந்ததால் பங்களாகுளம் என அழைக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு

நகரத்தின் 4 பகுதிகளில் இருந்தும் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் கட்டமைப்புடன் கூடிய வடிகால்கள் உள்ளன. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தின் தண்ணீரை குடிநீராக மக்கள் பயன்படுத்தி வந்தனர். பேரூராட்சியின் சார்பில் இந்த குளத்திற்கு காவலாளியும் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இந்த குளம் பராமரிக்கப்படாமல் ஆக்கிரமிப்பால் சுருண்டது.

வடிகால்கள் அடைக்கப்பட்டு தூர்ந்து போய் உள்ளன. நல்ல மழை பெய்தாலும் குளத்திற்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. நகர பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள குளம் வறண்டு கிடப்பதால் நீர்மட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கறம்பக்குடி பங்களாகுளத்தை மேம்படுத்தி 4 கரைகளையும் பலப்படுத்தி நடைபயிற்சி தளம் அமைக்கவும், வடிகால்களை சீரமைத்து குளத்தில் தண்ணீர் பெருகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

குளத்திற்கு தண்ணீர் செல்வது இல்லை

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாரிக்கண்ணு:- கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்த குளம் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது. கடும் வறட்சி காலத்திலும் இந்த குளத்தில் தண்ணீர் இருக்கும். கறம்பக்குடி நகர பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த குளம் விளங்கியது. ஆனால் வரத்து வாரி வாய்க்கால்கள் அடைப்பால் பலத்த மழை பெய்தாலும் குளத்திற்கு தண்ணீர் செல்வது இல்லை. தொடர் கோரிக்கைகளால் வாய்க்கால்கள் மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன. ஆனால் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் இல்லை. எனவே அனைத்து பகுதியிலும் வடிகால்களை கண்டறிந்து கட்டமைப்பை பலப்படுத்தி குளத்திற்கு தண்ணீர் செல்வதை உறுதிபடுத்த வேண்டும்.

கரைகளை பலப்படுத்த வேண்டும்

கணேசன்:- நகரின் மைய பகுதியில் இயற்கை எழில் மிக்க பகுதியில் இருந்த பங்களா குளம் தற்போது பராமரிப்பு இன்றி வறண்டு கிடப்பது வேதனையாக உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு மழை காலத்தில் வடிகால்களில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து வரும் காட்சியை பார்ப்பதற்கே பெரும் கூட்டம் கூடும். தற்போது வரத்து வாய்க்கால்களை தேடி காணவேண்டி உள்ளது. குளத்திற்கு தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட சிறு பாலங்கள் தற்போது இல்லை. எனவே வரத்து வாய்க்கால்களை சீரமைக்கவும், குளத்தின் கரைகளை பலப்படுத்தி, பராமரித்து மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூங்கா உருவாக்க வேண்டும்

கறம்பக்குடியை சேர்ந்த சண்முகம்:- பாரம்பரிய மிக்க பங்களாகுளம் பராமரிப்பு இன்றி இருப்பது நகர வாசிகளை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. பயன்பாடு இல்லாத குளங்கள் கூட தற்போது மேம்படுத்தப்படுகிறது. கறம்பக்குடியின் அடையாளமாக உள்ள இந்த குளம் கண்டுகொள்ள படாமல் இருப்பது வேதனை. கறம்பக்குடியில் நடை பயிற்சி செய்வதற்கு உகந்த இடம் இல்லை. எனவே இந்த குளத்தின் கரைகளை பலப்படுத்தி நான்கு பகுதிகளிலும் நடை பயிற்சி தளம் அமைக்க வேண்டும். குளத்தை அழகுப்படுத்தி பூங்கா போன்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கோடைகாலத்திலும் குளத்தில் தண்ணீர் இருக்கும் வகையில் ஆழ்குழாய் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்