16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான முகாம்
பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான முகாம் ஜூலை 1-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை நடக்கிறது.
ராணுவத்தில் சேர்ப்பதற்கான முகாம்
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான முகாம் ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு
ராணுவத்தில் வீரர்களை சேர்ப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஆன்லைனில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு தகுதியானவர்களை ராணுவ பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கான முகாமாக நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள வரும் இளைஞர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும், அவர்கள் அமர்வதற்கு தேவையான அளவில் பந்தல் அமைத்து கொடுக்க வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், பயோமெட்ரிக் முறையிலான வருகைப்பதிவேடு, ஆன்லைனில் பதிவு செய்திட தேவையான கணினி வசதிகள், இணையதள இணைப்பு வசதி, பிரிண்டர், ஸ்கேனர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தேசிய தகவல் அலுவலர் ஒருங்கிணைந்து செய்திட வேண்டும்.
மருத்துவ பரிசோதனை
முகாமில் நடைபெறும் நிகழ்வுகள், முகாம் நடைபெறும் மைதானம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்களால் கண்காணிக்கப்பட வேண்டும். இரண்டடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ளும் நபர்களின் விவரங்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்வதற்கும், சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கும், மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வருவாய் துறை மற்றும் சுகாதார துறையினர் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
தீயணைப்பு வாகனம், 108 அவசரகால ஊர்தி, மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். முகாம் சிறப்பாக நடந்திட அனைத்து துறையினரும் முழு ஒத்துழைப்பு தந்திடவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், மருத்துவ அலுவலர் டாக்டர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம்குமார் உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.