விண்ணப்பங்களை பெற 3 கட்டமாக முகாம் நடத்த வேண்டும்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பெற 3 கட்டமாக முகாம் நடத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தனார்.

Update: 2023-07-11 19:00 GMT

ஊட்டி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பெற 3 கட்டமாக முகாம் நடத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தனார்.

ஆலோசனை கூட்டம்

குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை" திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பெற 3 கட்டங்களாக முகாம் நடத்தப்பட வேண்டும். முகாம் நடத்துவதற்கான பள்ளிக்கட்டிடம், சமுதாயக்கூடம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் தேர்வு செய்து உடனே சமர்ப்பிக்க வேண்டும். முதல் கட்டத்தில் 1,10,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 200 முகாம்களிலும், 2-ம் கட்டத்தில் 1,10,000 அட்டைதாரர்களுக்கு 200 முகாம்களிலும் விண்ணப்பங்கள் பெறும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்.

வீடுகள் தோறும் விண்ணப்பங்கள்

திட்ட இயக்குனர் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், அச்சடித்து வரப்பெறும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் டோக்கன்களை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கொடுத்து வீடுகள் தோறும் சென்று வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் விண்ணப்பங்களில் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் குடும்ப அட்டை எண் குறிப்பிட்டு வழங்கி, முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

மேலும் 404 ரேஷன் கடைகள், 34 நடமாடும் கடைகள் ஆகியவற்றின் விற்பனையாளர் விவரங்களை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அளிக்க வேண்டும். முகாம் நடைபெறும் இடங்களுக்கு வரும் பயனாளர்கள் அமர்வதற்கான போதிய இருக்கைகள், குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். முகாமின் போது பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் பெறப்பட்டால் அதனை பூர்த்தி செய்து வழங்க உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சி

தொடர்ந்து முதன்மை பயிற்சியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதை கலெக்டர் பார்வையிட்டார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனப்ரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்