தேசிய குடற்புழு நீக்க முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 3,493 மையங்களில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் தீபக் ஜேக்கப் முகாமை தொடங்கி வைத்தார்.

Update: 2023-02-14 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 3,493 மையங்களில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் தீபக் ஜேக்கப் முகாமை தொடங்கி வைத்தார்.

குடற்புழு நீக்க முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் தீபக் ஜேக்கப் பள்ளி மாணவிகளுக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சுகாதாரத்துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகள் இணைந்து குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க முகாமை நடத்துகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு தொற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

3,493 மையங்களில்...

மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டாசோல் மாத்திரை வருகிற 21-ந் தேதி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர அனைத்து பெண்களுக்கும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் 1,697 பள்ளிகள் மற்றும் 1,796 அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 3,493 மையங்களில் 7 லட்சத்து ஆயிரத்து 724 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.

இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ள ஊக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தாசில்தார் சம்பத், பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் சுசித்ரா, இனியாள் மண்டோதரி, நகராட்சி தலைவர் பரிதாநவாப் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்