வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,082 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி, பர்கூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-13 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,082 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி, பர்கூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா நேரில் ஆய்வு செய்தார்.

கலந்தாய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் ஷோபனா தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற 2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், 17 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள், நவம்பர் 9-ந் தேதி முதல் டிசம்பர் 8-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 1,082 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 12, 13 மற்றும் வருகிற 26, 27-ல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே தகுதியான நபர்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்பேசினார்.

இந்த கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி கலெக்டர் சதீஷ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேரில் ஆய்வு

தொடர்ந்து நேற்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலையில் கிருஷ்ணகிரி, பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அதிகாரி ஷோபனா கூறுகையில், மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இளம் வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி, பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அதிகாரி ஷோபனா ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்