200 மருத்துவ முகாம்கள் மூலம் 2 லட்சம் கால்நடைகள் பயன் பெறும் - கலெக்டர்

திருவாரூர் மாவட்டத்தில் 200 மருத்துவ முகாம் மூலம் 2 லட்சம் கால்நடைகள் பயன் பெறும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-10-06 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் 200 மருத்துவ முகாம் மூலம் 2 லட்சம் கால்நடைகள் பயன் பெறும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

மருத்துவ முகாம்

திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சி நான்கரை பகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 200 கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வட்டாரத்திற்கு 20 முகாம்கள் என்ற அளவில் நடத்தப்படும் இம்முகாமின் மூலம் மாவட்டத்தில் 2 லட்சம் கால்நடைகள் பயன்பெறும்.

பயன்படுத்தி...

இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழுநீக்கம், தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல், ஸ்கேன் மூலம் சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் கண்டறியப்படும். முகாமினை கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அதனை தொடர்ந்து கால்நடை வளர்ப்போருக்கு கால்நடைகளுக்கான தாது உப்பு, தீவனங்கள், புல்கரணைகள் உள்ளிடவைகளை கலெக்டர் வழங்கினார். முகாமில் 556 கால்நடைகளுக்கும், 1236 வெள்ளாடுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு குடற்புழுநீக்கம் செய்யப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முகாமில் கால்நடை பராமரிப்புதுறையின் இணை இயக்குநர் (பொறுப்பு) ராமலிங்கம், உதவி கலெக்டர் சங்கீதா, உதவி இயக்குனர்கள் சபாபதி, சாமிநாதன், ஈஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், உழவர் பயிற்சி மையத்தின் தலைவர் கதிர்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஊராட்சி செயலர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்