ரூ.23½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்

உபயவேதாந்தபுரத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.23½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2022-08-24 17:19 GMT

உபயவேதாந்தபுரத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.23½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

மக்கள் நேர்காணல் முகாம்

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள உபயவேதாந்தபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களின் இருப்பிடத்திலேயே நேரடியாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசு போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

ஒத்துழைப்பு தேவை

மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகமால் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை.

சுற்றுப்புற தூய்மையை பராமரிக்க மக்கள் தங்கள் வீடுகளில் தேங்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பை சேகரிக்க வருபவர்களிடம் வழங்க வேண்டும்.

வீட்டு மனைப்பட்டா

இந்த முகாமில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிட்டில் வீடு கட்டுவதற்கான ஆணை, வருவாய்த்துறையின் சார்பில் 31 பேருக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டா, வேளாண்மைத்துறையின் சார்பில் 17 பேருக்கு ரூ.25 ஆயிரத்து 235 மதிப்பீட்டில் இடுபொருட்கள் உள்ளிட்ட ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். முகாமில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, வருவாய் கோட்டாட்சியர்.சங்கீதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், தாசில்தார் பத்மினி, ஆணையர்கள் சந்தானகிருஷ்ண ரமேஷ், வெற்றியழகன், உபயவேதாந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்