1,346 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,346 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி செலுத்தும் முகாம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,346 மையங்களில் இந்த தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் நடக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
முன்னுரிமை
இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்தி கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 182 நாட்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். 18 முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி் செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.