கால்நடைகளுக்கு கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் இன்று(புதன்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடைபெற இருப்பதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

Update: 2023-01-31 18:45 GMT


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கருச்சிதைவு நோய்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் பொருளாதாரம் கால்நடைகளின் உற்பத்தியை பொறுத்து அமைகிறது. கறவை மாடுகளில் கன்று ஈணுதல் அதைத்தொடர்ந்து பால் உற்பத்தியே பண்ணை பொருளாதாரத்தை நிர்ணயம் செய்கிறது. இந்த அடிப்படையான கன்று ஈணுதல் பல்வேறு காரணங்களால் தடைபடுகிறது. அதில் முக்கியமாக நிரந்தரமான பாதிப்பு கருச்சிதைவு நோயாகும்.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று(புதன்கிழமை) முதல் வருகிற 28-ந் தேதி முடிய ஒரு மாத காலத்தில் கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 4 மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு கருசிதைவு நோய்க்கான தடுப்பூசி போடப்படும்.

மனிதர்களுக்கும் பரவுகிறது

கிடேரி கன்றுகளுக்கு ஒருமுறை வாழ்நாள் தடுப்பூசி அளிக்கப்படுவதால் நீண்டகால எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் நஞ்சுக்கொடி ரத்தம் மற்றும் பால் மூலம் நச்சுயிரி வெளியேறும் மாசுபட்ட நஞ்சுக்கொடி மற்றும் ரத்தத்தை தொட்டு சுத்தம் செய்வதாலும், பாலை நன்கு காய்ச்சாமல் குடிப்பதாலும் இந்நோய் மனிதர்களுக்கும் பரவுகிறது.

எனவே கருச்சிதைவு மாட்டை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். கருச்சிதைவு நடந்த பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நோய் காணும் பகுதிகளில் கன்றுகளுக்கு புருசெல்லா வகை நோய்தடுப்பு மருந்து அளிப்பது சிறந்தது.

மருத்துவ குழுவினர்

எனவே தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தில் கால்நடைகளை வளர்க்கும் விவசாய பெருமக்கள் அவர்களது கிராமங்களில் 4 முதல் 8 மாத கிடேரி கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய்க்கு தடுப்பூசி அளிக்க மருத்துவ குழுவினர் வருகைபுரியும் போது கிடேரி கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய்க்கான தடுப்புசி செலுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்