ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்

ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-01-31 19:13 GMT

இணையதளம் உள்பட தனியார் நிறுவனங்களின் சில சேவைகள் கேபிள் இணைப்பு மூலமே வழங்கப்படுகின்றன. அந்த கேபிள்களை முறையாக எடுத்துச்செல்லாததால், இங்கும், அங்கும் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையை விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது.

பெரும்பாலான தெருக்களில் தெரு விளக்கு கம்பங்களை ஆக்கிரமித்துத்தான் தனியார் கேபிள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இது தனியார் நிறுவனங்களின் கேபிள்களுக்கு ஏதோ மாநகராட்சியோ, நகராட்சியோ, ேபரூராட்சியோ வசதி செய்து கொடுத்ததுபோல இருப்பதாக பலருக்கு ஆதங்கத்தை தருகிறது.

ஆபத்தை ஏற்படுத்தும்

இதை சாதாரணமாக கூறிவிட முடியாது. பல சமயங்களில் இந்த ஒயர்கள் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் ஒயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியாக கடந்து செல்பவர்களுக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விபத்துகளையும் கூட ஏற்படுத்திவிடுகின்றன.

தொங்கிக்கிடக்கும் ஒயர்களை முறையாக கவனித்து அகற்றுவது கேபிள்களை கொண்டுசெல்லும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு. ஆனால் அந்நிறுவனங்கள் அதைச் சரிவர செய்வது கிடையாது.

கம்பங்களை நட்டு கேபிள்களை கொண்டுசெல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்கின்றனர். இதில் எத்தனை கேபிள்கள் உரிய அனுமதி பெற்று கொண்டுசெல்லப்படுகின்றன என்பதும் புரியாத புதிர்.

இதையெல்லாம் சீர்ப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சந்தாதாரர்கள் புகார்

விருதுநகரை சேர்ந்த தனியார் நிறுவன அலுவலர் சரவணன்:-

விருதுநகரில் தெருக்களிலும், போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும் கேபிள் டி.வி. இணைப்புக்கான ஒயர் தொட்டுவிடும் உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் தொங்கிக்கொண்டிருக்கும் கேபிள் டி.வி. ஒயர்கள் சில நேரங்களில் அறுந்து மின்கம்பிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் மின்சாரம் தாக்கும் நிலையும் ஏற்பட்டு விடும்.

இதனால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சந்தாதாரர்கள் ஒளிபரப்பு தெரியவில்லை என்று புகார் செய்தால் கேபிள் டி.வி. நடத்துேவார் இணைப்புகளில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். ஆனால் இடையில் ஒயர்கள் தொங்கிக் கொண்டிருந்தாலும் அது பற்றி கவலைப்படாத நிலை தொடர்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். சில குடியிருப்பு பகுதிகளில் டெலிபோன் இணைப்பு ஒயர்களும் தொங்கிக் கொண்டிருக்கும் நிலை உள்ளது.

கண்டுபிடிப்பதில் சிரமம்

ராஜபாளையம் முருகம்மாள்:- நகர் பகுதியில் ஏற்கனவே தாழ்வாக மின்சார ஒயர்கள் செல்கின்றன. இதில் மழைக்காலங்களிலும், காற்று காலங்களிலும் ஒயர்கள் தொங்கியபடி காட்சி அளிக்கும் போது மிகவும் பயமாக உள்ளது.

அதேபோல கேபிள் டி.வி. ஒயர்களும், தொலைபேசி ஒயர்களும் இதற்கு இடையே செல்வதால் எந்தெந்த ஒயர்கள் என்பதில் கண்டுபிடிப்பதில் சிரமமும், சிக்கலுமே நீடிக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒரு சில வீடுகளில் முன்பகுதியில் சிறிய மரங்கள் வளர்ப்பதால் மரங்களுக்கு இடையே மின்சார ஒயர்களும், கேபிள் டி.வி. ஒயர்களும் சென்று வருவதை கண்டறிந்து உடனே சீரமைக்க வேண்டும்.

விபத்துகள்

வத்திராயிருப்பை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராமர்:-

கேபிள் டி.வி. ஒயர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் மிகவும் தாழ்வாக செல்கிறது. சாலையின் குறுக்கே தாழ்வாக செல்வம் ஒயா்களால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.

இரவு நேரத்தில் தாழ்வாக செல்லும் ஒயர்கள் தெரியாமல் விபத்து நேரிடுகிறது. பெரிய அளவில் விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக தொங்கி கொண்டு இருக்கும் ஒயர்களை சீரமைக்க வேண்டும்.

அதிகாரிகள் நடவடிக்கை

கொங்கன்குளம் பொன்னுபாண்டியன்:-

இணையதளம் உள்பட சில வசதிகளை வழங்குவதற்காக இந்த கேபிள்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பாதுகாப்பாக அமைக்கப்படாமல் கொண்டு செல்லப்படுகிறது. சில வீடுகளுக்கு முன்பு இ்ந்த ஒயர்கள் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன. தெருக்களில் கனரக வாகனங்கள் செல்லும் போது தாழ்வாக தொங்கும் ஒயர்களில் சிக்கி விபத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் அந்த ஒயர் அறுந்து கீழே கிடக்கும் போது இரவு நேரங்களில் ஒயர் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மக்களுக்கு பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தும் முன்பு இந்த கேபிள்களை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்