கூடலூர் பகுதியில் முட்டைக்கோஸ் அறுவடை பணி தீவிரம்

கூடலூர் பகுதியில் முட்டைக்கோஸ் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-12-07 16:39 GMT

கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கழுதைமேடு, பெருமாள்கோவில் புலம், காக்கான்ஓடை, காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முட்டைக்கோஸ் பயிரை சாகுபடி செய்திருந்தனர். இந்தநிலையில் தற்போது முட்டைக்கோஸ்கள் நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது.

இதையொட்டி விவசாயிகள் முட்டைக்கோஸ் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள் முட்டைக்கோசை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர். சில விவசாயிகளிடம் வியாபாரிகள் ஒப்பந்த அடிப்படையில் சீசன் முடியும்வரை மொத்த பணத்தை கொடுத்துவிட்டு முட்டைக்கோசை அறுவடை செய்கின்றனர்.

அறுவடை செய்யப்பட்ட முட்டைக்கோசுகள் பைகளில் அடுக்கி லாரிகள் மூலம் மதுரை, ஒட்டன்சத்திரம் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது முட்டைக்கோஸ் ஒரு கிலோ ரூ.6-ல் இருந்து ரூ.10 வரை விற்பனை ஆகிறது. ஆனால் கடந்த மாதம் முட்டைக்கோஸ் ஒரு கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.35 வரை விற்பனை ஆனது. முட்டைக்கோஸ் அதிக விளைச்சல் இருந்தும், அதன் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்