புறவழிச்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

திருவையாறு அருகே புறவழிச்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கலெக்டரின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை விவசாயிகள் திரும்ப பெற்றனர்.

Update: 2022-12-03 20:57 GMT

திருவையாறு;

திருவையாறு அருகே புறவழிச்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கலெக்டரின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை விவசாயிகள் திரும்ப பெற்றனர்.

புறவழிச்சாலை

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கண்டியூரில் இருந்து திருவையாறு வரை இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.இதையடுத்து மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், ஆகிய ஊர்கள் வழியாக 6.74 கி.மீ. தூரத்துக்கு 45 மீட்டர் அகலத்துக்கு ரூ.191 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

விளை நிலங்கள்

இந்த புறவழிச்சாலை முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதால் நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலைக்கொடிக்கால் அடங்கிய நிலங்களை அழித்து அதில் சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.எனவே திருவையாறில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போதும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதாக அரசாணை வெளியிடப்பட்டது இதைத் தொடர்ந்து நவம்பர் 6-ந் தேதி புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 150 அடி அகலம் கொண்ட சாலையில் 100 அடி அளவுக்கு செம்மண் கிராவல் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.

நெற்பயிர்கள் அழிப்பு

இந்த செம்மண் கிராவல் நிரப்பப்படும் அரசூர், கண்டியூர் பகுதியில் சம்பா நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களை அழித்து அதன் மீது பொக்லின் எந்திரங்களை கொண்டு செம்மண் கிராவல் பரப்பப்படுகிறது.கடந்த சில நாட்களாக இந்த பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் கண்டியூர் பகுதியில் சம்பா நெற்பயிர் மீது செம்மண் கிராவல் கொண்டு நெற்பயிரை அழிப்பதை பார்த்த விவசாயிகள் திரண்டு கடந்த 30-ந்தேதி முதல் அந்த பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் நேற்றும் பணியை செய்யவிடாமல் தடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை அது அவசியம்தான். அதே நேரத்தில் சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளை அடிமைப்படுத்தி, காவல்த்துறையை வைத்து அச்சுறுத்தி நிலங்களை கையகப்படுத்தாமலேயே அவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை ஒதுக்கிடு செய்யாமல் சாலை அமைக்கும் பணியை செய்யவிட மாட்டோம்.விளை நிலங்களில் பயிர்கள் ஒருமாதத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் முற்றிலும் மண் கொட்டி பயிர்களை அழிப்பது சட்ட விதி மீறல் ஆகும். இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அதுவரை சாலையை அமைக்க கூடாது என்றார்.

கலெக்டருடன் பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவையாறு தாசில்தார் பழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட கலெக்டரிடம் புறவழிச்சாலை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.இதையடுத்து விவசாயிகள் போராட்டக்குழு அமைக்கப்பட்டு தலைவராக கமலக்கண்ணன், செயலாளராக சுகுமாரன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர். இதைகேட்ட கலெக்டர் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு பணிகள் தொடங்கப்படும் என்றார்.கலெக்டரின் வாக்குறுதியை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்