பெருந்துறை நித்யா ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக பணம் வழங்கப்பட்டது

ஈமு பார்ம்ஸ்

Update: 2022-08-17 16:50 GMT

பெருந்துறை நித்யா ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக பணம் வழங்கப்பட்டது.

நித்யா ஈமு பார்ம்ஸ்

பெருந்துறையில் 2012-ம் ஆண்டு நித்யா ஈமு பார்ம்ஸ் மற்றும் பவுல்ட்டரி நிறுவனம் செயல்பட்டு வந்தது. பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, 244 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 44 லட்சம் முதலீடு பெற்றனர். ஆனால் குறித்த காலத்தில் முதலீட்டாளர்களுக்கு முதிர்ச்சியான பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பான வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு நடக்கும் போது 22 முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. மேலும் நிறுவன உரிமையாளர்களான முனியன் என்கிற முருகவேல் பாண்டியன் (வயது 47), அவருடைய மனைவி மாரியம்மாள் என்கிற லதா (45) ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 கோடியே 44 லட்சம் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி கோவை டான்பிட் கோர்ட்டு உத்தரவிட்டது.

10.70 சதவீத அடிப்படையில்...

அதில், அபராத தொகை ரூ.4 லட்சம் மட்டும் கோர்ட்டு வழக்கு செலவுக்காக வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள ரூ.2 கோடியே 40 லட்சம் அபராத தொகையை முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் முனியன், மாரியம்மாள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஜாமீன் பெற்றனர். இதில், ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி வங்கி கணக்கில் உள்ள, நித்யா ஈமு கோழி நிறுவனத்தின் ரூ.39 லட்சமும், முனியன், மாரியம்மாள் ஆகியோர் ஜாமீனின் போது செலுத்தபட்ட ரூ.10 லட்சமும் முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் 58 பேருக்கு பணம் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள முதலீட்டாளர்களில் ஒரு சாராருக்கு இன்றும் (வியாழக்கிழமை), மற்றொரு சாராருக்கு வருகிற 23-ந்தேதியும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக 10.70 சதவீத அடிப்படையில் பணம் பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்