போலி பிட்காயின் மூலம் ரூ.12 லட்சம் மோசடி; வாலிபர் கைது

முகநூல் மூலம் போலி பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-04 18:45 GMT

முகநூல் மூலம் போலி பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ரூ.12 லட்சம் மோசடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வவ்வால்ெதாத்தி பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 48). இவருடைய முகநூல் கணக்கில் பிட்காயின் முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்று வந்தது. இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர்கள் கொடுத்த இணையதளத்தில் ரூ.12 லட்சத்து 10 ஆயிரத்து 740 முதலீடு செய்து உள்ளார். அதன்பின்னர் அந்த நபரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

போலீசில் புகார்

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீஸ் இணையதள பக்கத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சைபர் கிரைம் போலீசாருக்கு புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை வாலிபர்

விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டது கோவை சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன் கருணாகரன் (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று முன்தினம் கோவைக்கு விரைந்தனர். வீட்டில் இருந்த கருணாகரனை போலீசார் கைது செய்து, தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.

மேலும் அவரிமிருந்து ரூ.5 லட்சம், ஒரு கார், லேப்-டாப், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

தொடர்ந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கருணாகரனை ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். மேலும் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.9 லட்சத்து 98 ஆயிரத்து 865 முடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்