வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் உள்பட 3 பதவிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல்
வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பதவிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இடைத்தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில், பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 9 பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடந்தது.
இதில், வடபுதுப்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், மொட்டனூத்து ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர், ரெங்கசமுத்திரம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர், முத்தாலம்பாறை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், தும்மக்குண்டு ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். இதனால், அந்த 5 வார்டுகளிலும் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
3 பதவிகளுக்கு போட்டி
இதற்கிடையே பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், சின்னஓவுலாபுரம் 7-வது வார்டு உறுப்பினர் ஆகிய 3 பதவிகளுக்கு மட்டும் நாளை மறுநாள்(சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது.
இதில், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். டி.வாடிப்பட்டி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், சின்னஓவுலாபுரம் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் களத்தில் உள்ளனர்.
இதற்கான வாக்குப்பதிவு நாளை காலை நடைபெற உள்ளதையொட்டி வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தேர்தலை அமைதியாக நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மதுக்கடைகள் மூடல்
வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) எடுத்து செல்லப்படும்.
உள்ளாட்சி இடைத்தேர்தல் நடப்பதையொட்டி, வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் மதுபான கடைகளை மூடுவதற்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்படி அப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகள், மதுபான பார்கள் நேற்று மூடப்பட்டன. நாளை வரை மதுக்கடைகள் மூடப்படும். பின்னர் வாக்கு எண்ணிக்கை நடக்கும் வருகிற 12-ந்தேதியும் மதுக்கடைகள், மதுபான பார்களை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.