`ஈரோடு இடைத்தேர்தல் முடிந்ததும் சில கட்சிகள் காணாமல் போய் விடும்'

ஈரோடு இடைத்தேர்தல் முடிந்ததும் சில கட்சிகள் காணாமல் போய் விடும் என்று கிருஷ்ணகிரியில் தி.க. தலைவர்கி.வீரமணி தெரிவித்தார்.

Update: 2023-02-18 18:45 GMT

ஈரோடு இடைத்தேர்தல் முடிந்ததும் சில கட்சிகள் காணாமல் போய் விடும் என்று கிருஷ்ணகிரியில் தி.க. தலைவர்கி.வீரமணி தெரிவித்தார்.

பெரியார் படிப்பகம்

கிருஷ்ணகிரியில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படிப்பகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை தி.க. தலைவர் கி.வீரமணி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து, மக்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். குறிப்பாக ேபாலீஸ் நிலையங்களில் ஆய்வுகள் செய்த முதல்-அமைச்சர் இவர் தான். யார் தவறு செய்தாலும் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில், தனிப்பட்ட 2 நபர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை, சாதி, மதம், அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்ககூடாது. அவ்வாறு செய்தால், அது பொது நலத்திற்கு உகந்ததல்ல. பா.ஜ.க.விற்கு சரக்கு கிடையாது. அவர்கள் எங்காவது, யாராவது தும்ம மாட்டார்களா?, இருமமாட்டார்களா? என காத்து இருக்கின்றனர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

வெளி மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கும், அதிக நேரம் வேலை செய்வார்கள் என்பதற்காக இங்கு வேலைக்கு அதிகளவில் அமர்த்துகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்கள் குறித்து அரசு பதிவுகள் செய்வதோடு, அதனை ஒழுங்குப்படுத்தி கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால், கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வேலைக்கு வருபவர்களால் தான் குற்றச்செயல்கள் நடக்கிறது. மேலும், அவர்களை வேலைக்காக அழைத்து வருபவர்கள் இங்கு கூலிப்படைகளாக மாற்றி குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். எனவே, காவல்துறையினர் வடமாநில தொழிலாளர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றி வாய்ப்பு

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுவோம் என தேர்தல் ஜன்னி வந்து விட்டதால், அவர் நிலைகுலைந்து தரம் தாழ்ந்து பேசி வருகிறார். இதனால் தி.மு.கவிற்கு வெற்றி வாய்ப்பு நாளுக்கு, நாள் பிரகாசமாக இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்தததும் சில கட்சிகள் காணாமல் போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்