ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் வெற்றி கிடைக்கும்-டி.டி.வி. தினகரன் பேட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் வெற்றி கிடைக்கும் என டி.டி.வி. தினகரன் கூறினார்.

Update: 2023-01-24 18:45 GMT

தேவகோட்டை,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் வெற்றி கிடைக்கும் என டி.டி.வி. தினகரன் கூறினார்.

பேட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் கடந்த 11-ம் தேதி நடந்த தாய், மகள் கொலை மற்றும் நகைகள் கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தி.மு.க.வினரின் தலையீடு போலீஸ்துறையில் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை கொள்ளை வழக்கில் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால் இங்கு நடைபெறும் போராட்டத்தில் அ.ம.மு.க.வும் பங்கேற்கும். மது கடைகளை படிப்படியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 20 மாதங்களில் அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு தேர்தலை சந்தித்தால் வெற்றி கிடைக்கும்.

ஒரணியில்...

தொண்டர் பலம், மக்கள் நம்பிக்கை இல்லாமல் மெகா கூட்டணி என்பதெல்லாம் மாயை. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய இரட்டை இலையை நம்பியும், பணபலத்தை நம்பியும் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. காலம் அவர்களுக்கு உணர்த்த ஆரம்பித்து விட்டது. விரைவில் அ.ம.மு.க. அ.தி.மு.க.வை மீட்டெடுத்து ஆட்சி அமைக்கும். இடைத்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த அ.ம.மு.க ஒத்துழைக்கும். மற்ற கட்சியினர் ஆதரவு தெரிவித்து அ.ம.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறவும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, கன்னங்குடி யூனியன் தலைவர் சித்தானூர் கார்த்தி மெய்யப்பன், தேவகோட்டை நகர செயலாளர் கமலக்கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான தென்னீர்வயல் கணேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்குடி சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்