இறைச்சி கடைக்காரர் கைது
திண்டுக்கல் அருகே வாலிபரை கத்தியால் குத்திய இறைச்சி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
சாணார்பட்டி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த இறைச்சி கடைக்காரர் அஜ்மீர்கான் (23) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு சாணார்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகில் ஜீவா நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜ்மீர்கான், ஜீவாவுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரமடைந்த அஜ்மீர்கான், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். இதில், படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜ்மீர்கானை தேடி வந்தனர். இந்தநிலையில் நத்தத்தில் பதுங்கியிருந்த அஜ்மீர்கானை நேற்று போலீசார் கைது செய்தனர்.