தூத்துக்குடி அருகே பரபரப்பு:தனியார் பள்ளிமாணவர்களின்பெற்றோர் திடீர் சாலைமறியல்

தூத்துக்குடி தனியார் பள்ளிமாணவர்களின்பெற்றோர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-10 18:45 GMT

தூத்துக்குடி அருகே, தங்களின் வாகனங்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க மறுப்பதை கண்டித்து நேற்று தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் பள்ளி

தூத்துக்குடி அருகே உள்ள மறவன்மடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் வடக்கு பகுதியில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் அமைந்து உள்ளது. இந்த பள்ளிக்கூடம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர பெற்றோர் நேரடியாக தங்கள் வாகனத்தில் குழந்தைகளை பள்ளி வளாகத்தில் கொண்டு சென்று விட்டு வந்தனர். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் திடீரென பெற்றோரின் வாகனங்கள் பள்ளி வளாகத்துக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டாராம்.

இதனால் பெற்றோர் வாகனத்தை ரோட்டில் நிறுத்தி விட்டு குழந்தைகளை இறக்கி விடுகின்றனர். அதன்பிறகு சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கூட வகுப்பறைக்கு குழந்தைகள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் நேற்று காலையில் பள்ளிக்கூடத்துக்கு மாணவர்களை விட வந்த பெற்றோர் பாளையங்கோட்டை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்