ஆவடியில் பரபரப்பு மின்சார ரெயில் தடம் புரண்டது
சென்னை ஆவடியில் நேற்று அதிகாலை மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால் பல ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை,
சென்னை ஆவடி அருகே உள்ளது அண்ணனூர் ரெயில்வே பணிமனை. இங்கு இருந்து ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்தே மின்சார ரெயில்கள் கடற்கரை நோக்கி இயக்கப்படுவது வழக்கம்.
இதன்படி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னை கடற்கரை நோக்கி செல்வதற்காக மின்சார ரெயில் ஒன்று அண்ணனூர் ரெயில்வே பணிமனையில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயிலை ரவி (வயது 58) என்பவர் ஓட்டி வந்தார்.
தடம்புரண்டது
இந்த ரெயிலில் ஏறுவதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆனால் அந்த ரெயில் ஆவடியில் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரெயில் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்ற அந்த மின்சார ரெயில் கண் இமைக்கும் நேரத்தில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
இதில் ரெயிலின் கடைசி 4 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. பயணிகள் யாரும் ரெயிலில் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதேபோல் ரெயில் என்ஜினின் முன்பகுதி தண்டவாளத்தின் ஓரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியதில் அந்த மின் கம்பம் மற்றும் மின்சார வயர்கள் அறுந்து கீழே சாய்ந்தது. தண்டவாளத்தை ஒட்டியிருந்த சிக்னல் பேனல் பெட்டிகளும் சேதம் அடைந்தன.
நடுவழியில் நிறுத்தம்
அதிகாலை நேரத்தில் மின்சார ரெயில் தடம் புரண்டதால் ஆவடி ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், சென்னை கோட்ட பொதுமேலாளர் விஸ்வநாத் ஈர்யா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், விபத்துக்கான காரணம் குறித்து ஆவடி ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ரெயில் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்களும், 10-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட ரெயிலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஜாக்கி கருவி மூலம் ரெயில் சக்கரங்களை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
ரெயில்சேவை பாதிப்பு
விபத்து காரணமாக சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில் சேவை உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மறுமார்க்கமாக வந்த மின்சார ரெயில்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
விடுமுறை நாளான நேற்று பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்காக அதிகஅளவில் ரெயில் மூலம் வந்திருந்தனர். நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி அருகில் இருந்த பஸ் நிலையங்களுக்கு சென்று பஸ்கள் மூலம் வீடுகளுக்கு சென்றனர். சிலர் குழந்தைகளுடனும், முதியவர்களுடன் வந்திருந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பயணிகள் அவதி
ஒரு வழியாக மின் கம்பிகளை சரி செய்த பின்னர் சென்டிரலில் இருந்து காலை 11.50 மணிக்கு திருவள்ளூர் நோக்கி ரெயில் சீரான வேகத்தில் இயக்கப்பட்டன.
மேலும், சென்னை சென்டிரல் வரக்கூடிய மின்சார ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லக்கூடிய 4-வது வழித்தடம் வழியாக இயக்கப்பட்டன.
எனவே ரெயில்கள், வேப்பம்பட்டு, இந்து கல்லூரி, அண்ணனூர், திருமுல்லைவாயில், அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காமல் சென்றன. இதனால் அந்தப்பகுதி பயணிகள் சிரமப்பட்டனர்.
திருப்பதி ரெயில் தாமதம்
ரெயில் தடம்புரண்டதால் ஆவடி மார்க்கமாக செல்லக்கூடிய சென்னை - மைசூரு வந்தே பாரத் ரெயில், சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை - கோவை இடையிலான கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அம்பத்தூர் அருகே நிறுத்தப்பட்டு சில மணி நேரத்திற்கு பின்னர் தாமதமாக புறப்பட்டு சென்றது.
திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
காரணம் என்ன?
ரெயில் விபத்து காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து ஆவடி மார்க்கமாக திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி சென்ற பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சென்டிரலில் இருந்து 1 மணி நேரத்திற்கு ஒரு ரெயில் சேவை என இயக்கப்பட்டதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு தங்களின் வீடுகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
தடம்புரண்ட ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டதையடுத்து, மாலை 6 மணியளவில் வழக்கமான ரெயில் சேவை தொடங்கியது.
ரெயில் தடம் புரண்ட பகுதியை ஆய்வு செய்த பின்னர் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் நிருபர்களிடம் கூறுகையில், 'ரெயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லை. இது கவனக்குறைவால் நடந்த விபத்து. ரெயில் டிரைவர் குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் ரெயிலை இயக்கியதே விபத்திற்கு காரணம்' என்றார்.
பணியிடை நீக்கம்
இதற்கிடையே ரெயில் விபத்துக்கு காரணமான ரெயில் டிரைவர் ரவி (மோட்டார் மேன்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும், ஆரம்பகட்ட விசாரணைகள் விரைவில் தொடங்கும் எனவும் தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.