ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு:ரூ.20 லட்சம் கேட்டு காங்கிரஸ் நிர்வாகி காரில் கடத்தல்

ஸ்ரீவைகுண்டம் அருகே ரூ.20 லட்சம் கேட்டு காங்கிரஸ் நிர்வாகி காரில் கடத்தப்பட்டார். அவரை போலீசார் மீட்டனர்.

Update: 2023-04-18 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே ரூ.20 லட்சம் கேட்டு காங்கிரஸ் நிர்வாகி காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

காங்கிரஸ் நிர்வாகி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மழவராயநத்தம் பகுதியை சேர்ந்தவர் மரியராஜ் (வயது 42). தற்போது ஆழ்வார்திருநகரில் வசித்து வரும் இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி ஊடகப்பிரிவு செய்தி தொடர்பாளராக உள்ளார்.

நேற்று முன்தினம் இவர் தனது காரில் பெருங்குளம் சென்று விட்டு மீண்டும் ஆழ்வார்திருநகரிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். சிவராமமங்கலம் பகுதியில் வந்தபோது கார் பழுதடைந்து நின்றது.

காரில் கடத்தல்

அப்போது அங்கு நின்றிருந்த சிவராமமங்கலத்தை சேர்ந்த வீரசங்கிலி (50), சுங்கநாதபுரத்தை சேர்ந்த பரமசிவன் (27) உள்ளிட்டவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென்று மரியராஜை தாக்கி, காரில் கடத்திச் சென்றனர்.

பின்னர் அவரது குடும்பத்தினருக்கு போன் செய்து, ரூ.20 லட்சம் தந்தால் தான் மரியராஜை விடுவிடுப்போம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

போலீசார் தேடுதல் வேட்டை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மேரி ஜெமிதா (ஏரல்), சப்-இன்ஸ்பெக்டர்கள் பெபின் செல்வ பிரிட்டோ, செல்வம் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் சிவராமமங்கலம் பகுதியில் தீவிரமாக தேடினார்கள். அப்போது, அந்த பகுதியில் ஒரு கார் நின்றது. போலீசாரை பார்த்ததும் காரின் அருகில் நின்ற பரமசிவன், வீரசங்கிலி உள்ளிட்டவர்கள் தப்பி ஓடினார்கள்.

காயங்களுடன் மீட்பு

போலீசார் துரிதமாக செயல்பட்டு வீரசங்கிலியை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து காரில் காயங்களுடன் இருந்த மரியராஜை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் மரியராஜிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் தப்பி ஓடிய பரமசிவன் உள்ளிட்டவர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்